சென்னை, அக். 30: வாழும் இடத்திலேயே ஜாதிச் சான்றிதழ் பெற்றுக் கொள்வது தொடர்பான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், எந்தெந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பயன் பெறுவார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அரசின் உத்தரவின் விவரம்: முக்குலத்தோர் என்று அழைக்கப்படும் கள்ளர், மறவர், அகமுடையார் வகுப்புகளில் கள்ளர் வகுப்பும், அதன் உட்பிரிவான ஈசநாட்டு கள்ளர் வகுப்பும் தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளர் வகுப்பின் மற்ற உட்பிரிவுகளான கந்தர்வ கோட்டை கள்ளர், பிரமலைக்கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரியூர் கள்ளர் ஆகிய வகுப்புகள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் சீர்மரபினர் வகுப்புகளாகவும், இதர மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று மறவர் வகுப்பும், அதன் உட்பிரிவுகளான அப்பநாடு கொண்டையம் கோட்டை மறவர் மற்றும் செம்பநாடு மறவர் வகுப்புகள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் சீர்மரபினர் வகுப்புகளாகவும், இதர மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. மற்றொரு உட்பிரிவான கருமறவர் வகுப்பு தமிழகம் முழுவதிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அகமுடையார் வகுப்பு தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மொழிவாரி மாநிலங்கள்... மொழிவாரி மாநிலங்கள் ஏற்படுத்தப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கு இணங்க சில வகுப்புகள் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் ஆகிய பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளாகவும், மாநிலத்தின் இதர பகுதிகளில் முன்னேறிய வகுப்புகளாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தாசபளஞ்சிகா வகுப்பு கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாகவும், புலவர் வகுப்பு கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாகவும், வைநாடு செட்டி வகுப்பு நீலகிரி மாவட்டத்தில் மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அரையர் மற்றும் லத்தீன் கத்தோலிக்க கிறித்துவ வண்ணார் வகுப்புகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆட்சியர்களுக்கு வேண்டுகோள்... மேற்கூறப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் வேறு இடங்களில் குடிபெயர்ந்தால் அங்கேயே அவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஜாதிச் சான்றிதழ்கள் வழங்க அதிகாரம் படைத்த அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ரேஷன் அட்டை உள்ளிட்டவை... சொந்த மாவட்டங்களில் சொத்துகளோ அல்லது ரேஷன் அட்டையோ இல்லாத நிலையில் அங்கு ஜாதிச் சான்றிதழை பெற இயலுவதில்லை. பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினர் என்று அறிவிக்கப்பட்டுள்ள வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் அந்தப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து மாநிலத்தின் வேறு பகுதிகளில் குடியேறும் நிலை உள்ளது. இந்த நிலையில், அவர்கள் தாங்கள் குறிப்பிட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என்பதற்கும் மற்றும் அந்த வகுப்பு பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினர் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வந்து குடியேறியவர் என்பதற்கும் ஆதாரமாக அந்தப் பகுதிகளில் (மாவட்டங்கள் அல்லது வட்டத்தில்) தங்களது பெற்றோருக்கு வழங்கப்பட்ட ஜாதிச் சான்றிதழ் போன்றவற்றை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுடைய வகுப்பு அவர்களது சொந்த மாவட்டத்தில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளதோ அதற்குரிய சான்றிதழ்களை குடியேறிய பகுதிகளில் உள்ள ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் வழங்கலாம் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment